சந்தேக நபர்கள் இருவரும் கைது!

சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலமாக முறைப்பாடு கிடைத்து சில மணி நேரத்தில் 5இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டுப் பொருட்கள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது நுணாவில் மேற்கு சாவகச்சேரிப் பகுதியில் அமைந்துள்ள வெளிநாட்டில் வசிப்பவரின் வீடொன்றில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் வீடு உடைத்து திருடப்பட்டிருப்பதாக கடந்த வியாழக்கிழமை வீட்டு பராமரிப்பாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையி்ல் விரைந்து செயற்பட்ட சாவகச்சேரிப் பொலிஸார் சில மணி நேரங்களில் தொலைபேசி உரையாடல்கள் சிலவற்றை அடிப்படையாகக் கொண்டு நாவற்குழிப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெறுமதி வாய்ந்த திருட்டுப் பொருட்களை மீட்டதுடன்-திருட்டுச் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இதன்போது திருடப்பட்ட பொருட்களான இரண்டு குளிர்சாதன பெட்டிகள்,குளிரூட்டி, அவுண், தண்ணீர் சுத்திகரிக்கும் இயந்திரம்,மின் விசிறி மற்றும் மெத்தைகள் ஆகிய 5இலட்சம் ரூபாய் பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்,மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் அறிவுரையின் கீழ்,
சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் உத்தியோகத்தர் பாலித செனவிரட்னவின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர்களான டார்வின் மற்றும் ஜெயரூபன் ஆகியோர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கைதான சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES
Share This